துண்டு புராணம்

2 months ago 27

துண்டு புராணம்

இன்று வேட்டி, சட்டையே கல்யாணம், பொங்கலன்று அணியும் யூனிபாரம் மாதிரி ஆகிவிட்டிருக்கிறது. இதில் துண்டை யார் நினைவு வைத்திருக்க போகிறார்கள்?
அதனால் அடுத்த தலைமுறைக்கு துண்டின் மகிமையை பதிவு செய்து வைக்கலாம்
துண்டு என்பது வெறும் ஒரு முழ துணியல்ல.கிராம கலாசாரத்தில் அது மிக முக்கிய இடத்தை வகிக்கிறது.துண்டு இல்லாமல் பெருசுகள் வெளியே கிளம்பவே மாட்டார்கள்.
துண்டு தோளில் அமர்ந்தால் நமக்கு மரியாதை. தோளில் துண்டை போட்டுக்கொண்டு கோயிலுக்கு போகிறவர்கள், போனதும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொள்வார்கள். சாமிக்கு மரியாதை
துண்டை எடுத்து தலையில் கட்டினால் களத்தில் இறங்கி புகுந்து விளையாட தயாராகிட்டோம்னு அர்த்தம்.
முந்திகாலத்தில் சட்டை எல்லாம் கிடையாது. துண்டுதான் சட்டை. பழைய சரத்குமார் படங்களில் நாட்டாமை விஜயகுமார் உடம்பு முழுக்க சந்தனத்தை பூச்சிகிட்டு துண்டை கட்டிகிட்டு தான் உலாவருவார். சட்டை போடமாட்டார்.
உட்காரும் முன் துண்டை எடுத்து திண்னையை சுத்தம் செய்யாமல் பெருசுகள் உட்கார மாட்டார்கள். திண்ணையா, அப்படின்னா என்னனு 2கே கிட்ஸ் கேப்பாங்க
கோபம் வந்தால் துண்டை முறுக்கி சிறுசுகளை அடிக்கவும் அடிக்கலாம்.அடிச்சது மாதிரியும் இருக்கும், அவர்களுக்கும் வலிக்காது.
கோபம் வந்து வெளியேறினா அதற்கான சொற்றொடரே "துண்டை உதறி தோள்ல போட்டுட்டு போயிட்டாரு" என்பதுதான். யாரும் வேண்டாம் என சொல்லி விட்டை விட்டு வெளியேறுபவன் கூட துண்டை உதறி தோள்ல போட்டுகிட்டு தான் போவான். காரணம் "துண்டில் எதுவும் இல்லை. ஒளிச்சு வெச்சுட்டு எதையும் எடுத்துட்டு போகலை. பார்த்துக்க" என்பதற்கான அடையாளம்.
தவிர வீட்டை விட்டு போகும் வழியில் மரத்தடியில் தூங்கவேண்டுமெனில் இன்ஸ்டன்டா துண்டு படுக்கையாகும்.குளிரடிச்சால் மேலே போர்த்தி தூங்க உதவும் போர்வையாகும்.சளி பிடிச்சால் துண்டு இன்ஸ்டன்டா கர்ச்சிப் ஆகும். வெய்யிலடிக்குதா துன்டுதான் தொப்பி, ஊதல்காற்றில் வேட்டியே பறக்கும் ரிஸ்க்கா? துண்டை பெல்ட் ஆக இடுப்பில் கட்டிக்கலாம்.
அடி உதை வாங்கி துண்டை கீழே போட்டுவிட்டு தப்பித்து ஓடினால் அதற்கான சொற்றொடர் "துண்டை காணோம், துணியை காணோம்" என ஓடினான் என்பதே
சோகமான விஷயம் நடந்தால் துண்டை தலையில் முக்காடா போட்டுகிட்டு உட்காரலாம். அப்படி உக்காந்தா பெரிய சோகம் நடந்துருச்சுனு அர்த்தம், வர்ரவங்க எல்லாம் "என்னப்பா கப்பல் கவுந்துருச்சா"னு கேப்பாங்க.
ரொம்ப அவமானகரமான விஷயம் நடந்தால் துண்டால் தலையை மூடிகிட்டு ஊருக்குள் உலாவரலாம். முள்ளுகாட்டில் நடக்கையில் வேட்டி கிழிந்தால் இன்ஸ்டண்டா துண்டை வேட்டியா கட்டிக்கலாம்.
பஞ்சாயத்தில் பிரச்சனை வந்தால் துண்டை போட்டு தாண்டி சத்தியம் செய்யலாம். அந்த அளவு தன்மானம், மரியாதையுடன் தொடர்புள்ள விசயம் துண்டு. இன்னமும் கிரமங்களில் 'நான் சொல்வது உண்மை,. வேணும்னா துண்டை போட்டு தாண்டறேன்" என்பார்கள்
பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது துண்டு. சந்தையில் பேரம் பேசும்போது விரல்களை துண்டால் மூடிகிட்டு பேரம் பேசலாம். அதுக்குனு தனி மொழியே இருக்கு. காய்கறிவிக்கறவ்ங்க துண்டை எடுத்து சும்மாடா தலையில் கட்டி அதுக்கு மேல தான் கூடையை வெப்பாங்க. அவ்ளோ ஏன் நாட்டின் பட்ஜெட் தாக்கல் சமயம் பற்றாகுறை வந்தால் "பட்ஜெட்டில் துண்டு விழுந்தது" எனத்தான் பத்திரிக்கைகளில் சொல்லுவார்கள்.
கேஷுவலா அணிவதற்கு கலரில் பட்டாபட்டி போட்ட துண்டு, அபிசியலா அணிய வெள்ளைதுண்டு, விசேசத்துக்கு அணிய பட்டுதுண்டு...
இப்பேர்ப்பட்ட துண்டை இப்ப யாரும் கட்டறதே கிடையாது.
அதனால இப்படி எல்லாம் துண்டு புராணத்தை பதிவு பண்ணி வெச்சா தான் வருங்கால தலைமுறைக்கு துண்டின் மகிமை தெரியும்.
Read Entire Article