கண்சிமிட்டி
கொஞ்ச நாட்களாக கண் பார்வை மங்கலாக, கலங்கலாக இருப்பது போல ஒரு பிரமை இருந்தது. மினரல் வாட்டரைப் பார்த்தால் கிரைண்டர் கழுவிய தண்ணீர் போல் இருந்தது.கேடராக்ட் இருக்குமோ என சந்தேகப்பட்டு சென்னையில் இருக்கும் ஒரு பிரபல கண் ஆஸ்பத்திரிக்குப் போனேன்.
அங்கு நல்ல சிகிச்சை கிடைக்கும். ஆனால் கையைக் கடிக்கும். திரையைக் கிழித்து திரவியம் தேடும் ஆஸ்பத்திரி அது.
முதலில் வழக்கமான பரிசோதனை. W S E J M படிக்க வேண்டும். கடைசி வரிசை படிக்க முடியாவிட்டால் நம்மிடம் கறந்து விடுவார்கள். அந்த டெஸ்டில் கடைசி இரண்டு வரிசையில் நான் ஃபெயில்.
பைனாக்குலர் மாதிரி இருந்த சமாச்சாரத்தில் பார்க்கச் சொன்னார்கள். இரண்டு நிமிடத்தில் அவர்கள் ஆவலுடன் தேடிய கேடராக்ட் அவர்களுக்குக் கிடைத்து விட்டது.
“உங்களுக்கு கேடராக்ட் இருக்கு. அதனால தான் கண் மங்கலா இருக்கு” என்று இருள் வாக்கு சொன்னார்கள்.
அதன் பிறகு ஒரு Counselling பெண்ணிடம் அனுப்பினார்கள்.
கவுன்சிலிங் எனப்படுவது யாதெனில் வரும் ஆட்களை கப்பெனப் பிடித்துப் போடுதல்.
ரிப்போர்ட்டுகளைப் பார்த்த கவுன்செல்லர் “எந்த லென்ஸ் வைச்சிக்கறீங்க?” என்று கேட்டார்.
“கைரேகை ஜோசியம் பாக்கற லென்ஸ் வைச்சிடாதீங்க. அதுல பிடி இருக்கும். மூக்கு வரைக்கும் தொங்கும்” என்றேன்.
“உங்களுக்கு Trifocal Toric லென்ஸ் வைச்சிடலாம்” என Trigonometric equation மாதிரி டெக்னிக்கலாக ஏதோ சொன்னார்.
அந்த லென்ஸ் வைத்துக் கொண்டால் தூரத்தில் இருப்பது, பக்கத்தில் இருப்பது, நடுப் பக்கத்தில் இருப்பது எல்லாமே தெரியுமாம்.
“நீங்க Reading solid யூஸ் செய்யறீங்களா?”என்றார்.
“Writing solid யூஸ் செய்யறேன்”
“இந்த லென்ஸ் வைச்சிகிட்டா....”
“இனிமே எழுதவே மாட்டேனா?”
“நோ. இனிமே நீங்க கண்ணாடியே போட வேணாம்” என்றவர் லென்ஸில் விலையை சொன்னார்.
ஒரு Eye க்கு அவர் சொன்ன விலையில் இரண்டு ஐ போன் வாங்கலாம். இருந்தாலும் சரியென்றேன்.
அவருக்கு மிகுந்த சந்தோஷம் .ஆஸ்பத்திரியில் இரண்டு நாள் அடுப்பெரியும்.
அடுத்த விஷயத்தை ஆரம்பித்தார்.
“சாதா ஆபரேஷனா? லேசர் ஆபரேஷனா?”
லேசர் ஆபரேஷன் என்றால் டாக்டர் கண்ணில் கையே வைக்க மாட்டார். லேசரே எல்லாவற்றையும் கிழித்து விடும். நீட் பாஸ் செய்த லேசர்.
சாதா ஆபரேஷனில் தோசைக் கரண்டி கொண்டு கண்களில் இருக்கும் திரையை சுரண்டுவார்களோ!
“லேசரே செஞ்சிடுங்க” என்றேன். அதற்குக் கூடுதல் கட்டணம். ஒரு Split A.C விலை.
“திங்கட்கிழமை கார்த்தால எட்டு மணிக்கு வந்துடுங்க” என்றார். திங்கட் கிழமை 7:30 முதல் 9:00 வரை ராகு காலம். ராகு காலத்தை ஏமாற்ற ஒரு உபாயம் செய்வார்கள். ஊருக்குக் கிளம்புபவர்கள் ராகு காலத்துக்கு முன்பாகவே பெட்டியை வீட்டுக்கு வெளியே வைத்து விடுவார்கள். ராகு நம்மை விட்டு விலகி பெட்டியை வெளியே வைக்காத மக்குப் பயல் யாரையாவது தேடிப் போய் விடும்.
அது போல பக்கத்து வீட்டு பாட்டி சொன்னார்.
“நீங்க ஏழரை மணிக்கு முன்னால கண்ணை எடுத்து வீட்டு வாசல்ல வைச்சிடுங்க” .
ஏழே காலுக்கே புறப்பட்டு எட்டு மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்தோம். ரிசப்ஷனில் ஒரு பெண் ‘வாவ்’ எனச் சொல்லும் வகையில் இருந்தாள். அவள் வாவென அழைத்தாள். என்னுடைய ஃபைல் பார்த்தாள்.
கண் மாற்றி ஆபரேஷன் செய்து விடக் கூடாதல்லவா! அதனால் என் இடது கையில் ஒரு Band கட்டினாள். அது சத்தியமாக ராக்கி இல்லை. அதில் என் பெயர் இருந்தது. போதாதற்கு என் இடது கண்ணின் மேல் ஒரு பெருக்கல் குறி போட்டாள். இது தான் நொள்ளைக் கண் என்பதற்கு அடையாளமாக.
சில Declaration signifier களில் கையெழுத்து போடச் சொன்னாள். Software download செய்யும் போது படித்துப் பார்க்காமல் I hold என்று டிக் அடிப்போமே அது போல டிக் செய்தேன்.
அதன் பிறகு அடுத்த அறைக்குக் கூட்டிப் போனார்கள். இங்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். கேடராக்டையும் மீறி அவர்கள் பளிச்செனத் தெரிந்தார்கள். ஒருவர் B.P யும் Oxygen ம் பார்த்தார். இன்னொருவர் ஒரு மாத்திரை கொடுத்தார்.
அந்த மாத்திரை Anxiety வராமல் இருப்பதற்கு என்று சொன்னாள். ‘உங்க டாக்டருக்கு பத்து கொடுங்க’ என்று நினைத்துக் கொண்டேன்.
தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன் ஆபீஸ் போகும் போது கே.ஆர் .விஜயா பின்னாலிருந்து கோட் மாட்டி விட்டு மாலையில் கன்னத்தில் அறை வாங்கிக் கொள்வார். அது போல ஒரு கன்னடத்து விஜயா பின்னாலிருந்து எனக்கு கவுன் மாட்டி விட்டார். நாம் சும்மா நின்று கொண்டிருக்க இன்னொருவர் கவுன் மாட்டி விட்டால் அந்த சோம்பேறித்தன சுகத்துக்கு ஈடு இணை வேறு எதுவுமே இல்லை.
தலையில் துணியினால் ஆன ஒரு தொப்பியை கட்டி விட்டாள். இதிலும் இடது பக்கம் செல்லோ டேப் ஒட்டினார். அதாவது இடது கண் தான் என்பதற்கான மூன்றவது கட்ட எச்சரிக்கை. இதையும் மீறி வலது கண்ணில் ஆபரேஷன் நடந்தால் நமக்குக் கட்டம் சரியில்லை என்று அர்த்தம்.
இன்னும் சில சுவாரசியம் இல்லாத ஃபார்மாலிடிக்கள் முடிந்த பிறகு இரண்டாவது நபராக ஆபரேஷன் தியேட்டருக்குள் அனுப்பினார்கள்.
தியேட்டரில் ஒரு ஸ்ட்ரெச்சரில் ஏறிப் படுக்கச் சொன்னார்கள்.
ஆபரேஷன் தியேட்டரில் மெலிதாக ஏதோ ஹிந்திப் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தது. நல்ல வேளையாக
‘கண்ணாளனே உனது கண்ணை இன்றோடு காணவில்லை’ என்ற பாட்டு ஒலிக்கவில்லை.
கண்ணைத் திறந்து ஒரு சொட்டு மருந்தை ஊற்றினார் ஒருவர். அது தான் மயக்க மருந்தாம். இவ்வளவு பணம் வாங்கிவிட்டு ஒரே ஒரு சொட்டா? ஐந்து லிட்டர் கேன் கொண்டு ஊற்றியிருக்கலாம்.
இரண்டே நிமிடத்தில் கிழி பீடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ‘மேலே இருக்கற லைட்டைப் பாருங்க. மூனு லைட் தெரியுதா?’ என்று கேட்டார்கள்.
ஆமாம் என்று தெரிந்ததைச் சொன்னேன்.
‘அந்த லைட்டையே பாருங்க’ என்றார்கள். அது தான் லேசர் லைட்டா? ஒவ்வொரு லைட்டையும் பார்த்ததில் என் பேங்க் பேலன்ஸ் கணிசமாகக் குறைந்தது.
பிறகு போஸ்ட் ஆபீசில் கவரின் மீது ஐந்து ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டுவது போல கண்ணுக்குள் எதையோ ஒட்டினார்கள். அநேகமாக அது லென்ஸ் ஆக இருக்கக் கூடும்
மொத்தமே ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது.
“உங்க ஆபரேஷன் முடிஞ்சது” என்றார் டாக்டர்.
பெருமாள் கோவிலில் பக்தர்கள் தலையில் சடாரி வைக்கும் அர்ச்சகர் போல அடுத்த ஆளுக்குப் போய் விட்டார் டாக்டர்.
ஒரு ஆள் வந்து என்னைக் கீழே இறக்கி விட்டார். ஒரு கருப்புக் கண்ணாடியைக் கண்ணில் மாட்டி விட்டார்.
“நீங்க நடந்து போகலாம்” என்று வெளியே அனுப்பி விட்டார்.
ஒரு வீல் சேர் கூடக் கொடுக்கவில்லை வீணர்கள். நடந்து போகச் சொல்லி விட்டார்கள். நடந்து வெளியே போனால் ஆபரேஷன் செய்து கொண்டதாக இந்த சமூகம் நம்பாதே!
வெளியே வந்தேன். முன்னர் பார்த்த அதே பெண் வந்தார். நலம், நலமறிய ஆவல் என விசாரித்தார். பிறகு தாம்பூலப் பை மாதிரி எதையோ கொடுத்தார். அதனுள்ளே ரவிக்கைத் துணி இருக்கவில்லை. ஒரு ஜூஸ் இருந்தது. ஒரு குடை இருந்தது. இந்தக் குடைக்காக நான் கொடுத்த விலை மிகவும் அதிகம்.
Dos and Don’ts சொன்னார்.
பணத்தைக் கட்டி விட்டு வெளியே வந்தோம்.
கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டதில் பசு மாடு எருமை மாடு மாதிரி தெரிந்தது. எருமை மாடு தெரியவே இல்லை.
முருகன் இட்லிக் கடையில் நான்கு விதமான சட்னிகள் வைப்பது போல நான்கு விதமான ஐ டிராப்ஸ் கொடுத்திருந்தார்கள்.
சரியாக கண்ணுக்குள் விழுவது போல அதைப் போட்டுக் கொள்வது ஒரு அவஸ்தை. வட இந்திய கோவில்களில் சிவலிங்கம் மேல் ஒரு சொம்பு இருக்கும். அதிலிருந்து நீர் சொட்டு சொட்டாக விழும். அது போல ஒரு சொம்பு இருந்தால் வசதியாக இருக்கும். அதற்குக் கீழே படுத்துக் கொள்ளலாம்.
இரண்டு நாட்களில் கண் நன்றாகத் தெரிய ஆரம்பித்தது. இது வரை தெரியாதது எல்லாம் தெரிந்தன. கிச்சன் சுவற்றில் எறும்பு ஊர்வது தெரிந்தது. அந்த எறும்பு கர்ப்பமாய் இருந்தது கூடத் தெரிந்தது.
அடுத்த திங்கட்கிழமை வலது கண்ணுக்கு ஆபரேஷன். மேலே கூறியது அனைத்தும் இன்னொரு முறை நடந்தன. பெண்கள் கூட மாறவில்லை. அதே கண்கள். அதே பெண்கள். அதே குடை.
ஒரு வாரம் கழித்து செக் அப் போனேன். சில சந்தேகங்கள் கேட்டேன்.
“தும்மினா லென்ஸ் கீழே விழுமா?”
“எச்சில் தான் விழும்” என்றார் அந்த பெண் டாக்டர்.
இந்த ஆஸ்பத்திரியில் எல்லா கண் டாக்டர்களும் இளம் கன்னிகளாகவே இருந்தார்கள். ரின் போட்டுத் துவைத்த வெள்ளைக் கோட் போட்டிருந்
தார்கள்.
“கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் பார்த்தா கொஞ்சம் Discomfort இருக்கு” என்றேன்.
“அந்த மாதிரி சமயத்துல கண்ணை சிமிட்டுங்க”
“இந்த மாதிரியா?” என்று அவளைப் பார்த்துக் கண் சிமிட்டியிருக்கலாம். போக்ஸோ சட்டத்தில் உள்ளே தள்ளி விடுவார்கள் என்ற பயத்தில் சிமிட்டல் கொஸ்டினை சாய்ஸில் விட்டு விட்டேன்.
மறுபடியும் பயாஸ்கோப்பில் தாடையை வைத்து டெஸ்ட்.
“உங்க லென்ஸ் எல்லாம் சரியான இடத்துல பத்திரமா இருக்கு. கொஞ்ச நாள்ல லென்ஸ் பவர் செட் ஆகி பழகிடும்” என்றார்.
பழகிக் கொண்டிருக்கிறேன்.
நகைச் சுவைக்காக கலாய்த்திருந்தாலும் இந்த மருத்துவ மனையில் சிகிச்சை சிறப்பாகவே இருந்தது. Systems, பணியாளர்களின் பணிவு, கனிவு, நீல நிறத்தில் மஞ்சள் பூ போட்ட புடவை யுனிஃபார்ம் எல்லாமே முதல் தரம். கண்ணைத் திறந்து கொண்டு Five Star Rating கொடுக்கலாம்.
டாக்டர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஜே!
(வாட்ஸ்ஆஃப் பகிர்வு)