என்ன செய்யப் போகிறாய்?

1 month ago 13
என்ன செய்யப் போகிறாய்?
அழகான பெண்களைப் பெற்ற தாய்மார்களின் இன்றைய கவலைகள் என்ன என்ன? அவர்களில்
பக்தியுள்ள தாய்மார்கள் பகவானிடத்தில் எப்படி வேண்டிக்கொள்வார்கள்? இவளுக்கு என்னதான்
வைத்திருக்கிறாய், நல்ல புத்தியைக் கொடு. இப்படியெல்லாம் மனதில் வேண்டிக்கொள்வது
சகஜமே. தாய்மார்களின் கவலைகள் நூற்றாண்டுகள் கடந்தாலும் மாறாது என்பதற்கு உதாரணங்கள்
பல பிரபந்தத்தில் உள்ளன.
சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் கோவளம் அருகில் எட்டாம் நூற்றாண்டுக்
கோயில் உள்ளது. அதன் பெயர் திருவிடவெந்தை. சுருக்கமாக திருவிடந்தை என்று சொல்கிறார்கள்.
மார்பில் லட்சுமிக்கு இடம் தந்த தந்தை போன்ற திருமாலின் உறைவிடம் என்று பொருள். அதில்
லட்சுமிவராகப் பெருமாளும், அகிலவல்லி நாச்சியாரும் எழுந்தருளியுள்ளனர்.
திருமங்கையாழ்வார் இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறார். பெரிய திருமொழி இரண்டாம் பத்து
ஏழாம் திருமொழியில் பத்து அற்புதமான பாடல்கள் திருவிடவெந்தையைப் பற்றிப் பாடியிருக்கிறார்.
என் மகளுக்கு என்னதான் நீ தீர்மானித்திருக்கிறாய் என்று பகவானைப் பார்த்து ஒரு தாய்
கேட்பதாகப் பாடல்கள் அமைந்துள்ளன. ஓர் உதாரணம் பாருங்கள்.
திவளும் வெண்மதிபோல் திரு முகத்து அரிவை
செழும் கடல் அமுதினில் பிறந்த
அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும்,
ஆகிலும் ஆசை விடாளால்;
குவளை அம் கண்ணி, கொல்லி அம் பாவை --
சொல்லு; நின் தாள் நயந்திருந்த
இவளை, உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்?
இடவெந்தை எந்தை பிரானே!
(அரிவை - பெண், ஆகம் - மார்பு, நயந்து - விரும்பி)
சந்திரன் போல் முகத்தை உடைய இந்தப் பெண் அமுதத்தில் பிறந்த மகாலட்சுமி உன் மார்பில்
இருப்பதை அறிந்தும் உன்மேல் ஆசையை விடவில்லை. குவளை மலர்க் கண்ணும், கொல்லிப்
பாவை போல உடலமைப்புமாக நிற்கிறாள். சொல்லு! உன்னை விரும்பும் இவளை என்ன செய்யப்
போகிறாய் திருவிடவெந்தைப் பிரானே!
என்ன செய்வது, ஒரு என்.ஆர்.ஐ. மாப்பிள்ளை பார்த்து அமெரிக்காவுக்கு அனுப்பிவிடட்டுமா என்று
அவர் கேட்கலாம்!
- சுஜாதா
Read Entire Article