இறை என்பது அவனா?அவளா?அதுவா?

1 month ago 41
இறை என்பது அவனா?அவளா?அதுவா?
அநேகர் கடவுளை ஆண் பாலாகவே சித்தரிக்கின்றனர்.
நம்மாழ்வார் கடவுளை ஆண்பால், பெண்பால் என்ற எல்லைக்குள் அடைக்க முடியாது என்று புரிய வைத்தவர்.
" ஆண் அல்லன்,பெண் அல்லன்,அல்ல அலி யும் அல்லன் " என்று பாடுகிறார்.
ஆனால் ஒரு தடை குறுக்கே வருகிறது.பாடல் முழுதும் 'அன் ' விகுதியில் முடிகிறது.ஆழ்வாரின் அடிமனத்தில் உள்ள நாராயணன் அப்படி பாட வைக்கிறான்.ஆதலால் கடவுள் 'ஆண் பால் 'என்ற கருத்து தான் நம்மாழ்வார் கருத்தாகிறது.
சைவர்களும் முக்கடவுள ரை சமமாக்கும்போது 'சதாசிவன்' என்பவரை மூவருக்கும் மேலோன் என்று சொல்வர்.
ஆனால் நம்மாழ்வாரின் சீடரான கம்பன் ஆண்பால் விகுதியைத் தூக்கி எறிந்து விட்டு'ஆண்பாலோ,பெண் பாலோ,அப்பாலோ, எப்பாலோ' என்று பாடி 'கடவுள் பால் வேறுபாடு கடந்தவர்' என்று பதிவு செய்கிறான்.

ஒரு பெரிய விசேஷம் என்னவென்றால், நாத்திகனையும் கம்பன் புறம் தள்ளவில்லை.
ஆத்திகம் எப்படி புறம் தள்ள முடியாததோ அதேமாதிரி தத்வார்த்த நாத்தீகமும் ஒதுக்கப் பட முடியாத ஒன்று.காரணம் 'இன்மை-'எனப்படும் 'இல்லை' யில் தான் உள்ளவை யாவும் அடங்கியுள்ளன.
இதற்கு உதாரணமாகக் கட்டிடத்தைச் சொல்லலாம்.நான்கு பக்க சுவர், தரை, மேற்கூரை எல்லாமே மனிதன் கட்டியது தான்.ஆனால் இதில் பயன்படும் இடம் உள்ளே இருக்கும் காலி இடம்-வெற்றிடம்.இத்தனை சிறிய உலகம் எவ்வளவு பெரிய வெற்றிடத்தில்(space ) ல் உள்ளது!நினைத்தாலே வியப்பாக உள்ளது.உள்ளதைவிட இல்லாததே நிரம்பி இருக்கிறது.இல்லாமையில் தான் இருப்பே அடங்கி உள்ளது.
காலி இடத்தில் கட்டிடம் எதற்கு? மீண்டும் ஒரு காலி இடம் உண்டாக்கி அதனுள் வசிப்பதற்கு.
காலி இடமான இல்லாமையில் தான் நம் இருப்பு அடங்குகிறது.நம் எல்லையே 'இல்லை'க்குள் அடங்கி நம் comfortableness portion ஆகி விடுகிறது.எனவே ' 'இன்மை' என்பதும் ஒரு இறைத் தன்மை என்பதை உண்மையான ஆன்மீக அறிவு உடையவர் நன்றாக உணர முடியும்.

கம்பனின் 'நாத்தீகர்' பற்றிய பார்வை ஆச்சரியமானது.'
'ஒன்றே என்னின் ஒன்றேயாம்;
பலவென் ருரைக்கின் பலவேயாம்;
அன்றே என்னின் அன்றே யாம்;
ஆம் என்றுரைக்கின் ஆமேயாம்;

இன்றே என்னின் இன்றேயாம் ;
உளதென்று நோக்கில் உளதேயாம்
வெகு வெகு நுட்பமான பார்வை.
'இல்லை'யில் 'இல்லை' என்ற signifier ல் கடவுள் இருப்பதாகக் கம்பர் எண்ணுகிறார் எனத் தோன்றுகிறது.

இதே கருத்தை வலியுறுத்தி இருக்கும் நம்மாழ்வார் பாசுரம்
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவமிவ்வுருவுகள்
உளனென இலனென இவைகுணமுடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே
ஆனால் ஆழ்வார் தன நாராயணனை விடாமல் பிடித்துக் கொண்டு பாடுவதாகத் தோன்றுகிறது.
இது ஆழ்வார் சீசன் .

THEEVIRA VAISHNAVARGALIN KARUTHTHU


.பெரும்புறக்கடலை அளக்கவோ ஆராயவோ முடியுமோ? முயற்சிக்கலாம். அந்தக் காலத்திலிருந்து மனிதன் முயன்றுகொண்டேதானே இருக்கிறான்.

இறை என்பது ஆணா? பெண்ணா? அதுவா? அவளா? எல்லா ஆழ்வார்களும் தேடிப்பார்த்து தோற்று முடிவில் அவன் தான் என்று சொல்கிறார்கள். காரணம், அவர்களால் வரையறுக்க முடியவில்லை. இறைத்தத்துவம்தான் அவனாகவும்,அவளாகவும்,அதுவாகவு,, அவையாகவும், ஒன்றாகவும்,பலவாகவுமாக இருக்கிறேதே . இதை நம்மாழ்வார் மிகவும் வியந்து பல பாசுரங்களில் பாடுகிறார். திருவாய்மொழியில் ஆரம்பத்திலேயே,
" எளிவருமியல்வினன் நிலைவரம்பில பல பிறப்பாய் " என்று அவன் எல்லார்க்கும் எளியவன் என்ற இயல்புடையவன், பலப்பல பிறவிகள் எடுக்கவல்லவன் என்றார். பிறகு, "யாருமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாருமோர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான்
பேருமோர் ஆயிரம் பிறபல உடைய எம்பெருமான்
பேரும் ஓர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே " என்று இறையை இன்ன வடிவம் கொண்டவன், இன்னப்படிபட்டவன், என்று எல்லாம் எளிதாக அறியமுடியாது . அவனுக்கு பல உருவமும், பல பேரும் உள்ளது, அப்படியில்லை பலப் பேர்களோ பல உருவங்களோ இல்லை என்ற விவாதம் என்றும் உள்ளது என்கிறார். முதலில், ஆழ்வார் அவளா, அதுவா, அவனா என்று ஆராய முயன்று முடிவில் அவன் தான் என முடிவெடுக்கிறார். ஏன், அந்த இறைதான் அவரவருக்கு வேண்டிய உருவத்தையும் பேரையும் எடுக்கிறதே ( இங்கு அக்றிணையாக குறிப்பிட வேண்டியுள்ளது)
இதையே பொய்கையாழ்வார் " தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம்தானே தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் தமருகந்தது எவ்வண்ணம் சிந்தித்து இமையாதிருப்பரே " என்கிறார்.
வைணவ கோட்பாடுகள், அந்த இறையைத் தவிர மற்ற எல்லா ஜீவன்களும் பெண் தன்மை உடையவர்களே , அவன் ஒருவனே புருஷன் என்று காட்டுகின்றன.
நம்மாழ்வார் அவன் என்ற முடிவுக்கு வந்த பின்னும், நீ யார், உன்னை என்னவென்று சொல்வேன் ?
" புகழும் நல் ஒருவன் என்கோ? பொருவில்சீர் ? பூமியென்கோ ?
திகழும் தண் பரவையென்கொ? தீ என்கோ? வாயுவென்கோ ?
நிகழும் ஆகாசம் என்கோ ? நீள் சுடர் இரண்டும் என்கோ ?
இகழ்வில் இவ்வனைத்துமென்கோ ? " என்று கேட்கிறார்.
அவனுடைய இயற்கைகளை, விசித்திரமான குணங்களை, செயல்களை எண்ணி வியந்து,
" மாய வாமனனே, மதுசூதா நீயருளாய்,
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே ? என்று போற்றுகிறார்.
அவன் என்பதே தக்கது என்று தேருகிறது. ஆண்டாளும் பரமன் புகழ் பாடி என்று தானே சொல்கிறாள்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த தத்துவம் அவரவர் தம தமது அறிவறிவகை அறிய வேண்டியது.
jayasala42
Read Entire Article