அருணகிரிநாதர் வரலாறு ..

1 month ago 27

அருணகிரிநாதர் வரலாறு ...


இளமை வேகத்தில் தவறுகள் பல செய்து உடல் ஆரோக்கியம் இழந்து நோய்வாய்ப்பட்டவர் அருணகிரிநாதர்.

தொழுநோய் பற்றிய நிலையிலும் பரத்தையினரைத் தழுவிடும் வேட்கையை மட்டும் விட்டாரில்லை. தமக்கையின் ஆதரவில் வாழ்ந்து வந்த அவர், வறுமையால் வாடிய போதும், வக்கிர உணர்வில் என்றுமே வாடியதில்லை.

தீயொழுக்கம் உடலை உருக்கிய நிலையிலும் மெய் சுகத்திலிருந்து மீளாத அருணகிரிநாதர், தமக்கையிடம் அந்தச் செலவுக்குப் பணம் கேட்க, அரிசியாலன்றி, ஒலியாலேயே நிரம்பிய கலயங்களைப் பார்த்து மனம் வெதும்பி, தம்பிக்கு கொடுக்கப் பணமில்லையே என்ற ஏக்கத்தில் பரிதவித்தாள். ‘தம்பி, உனக்கு எதற்காகப் பணம் வேண்டும்?

பெண் சுகத்துக்காகத் தானே! என்னிடம் பணமில்லை. ஆனால், பரவாயில்லை; என் உடலைத் தருகிறேன், எடுத்துக் கொள்’ என்று இரு கரம் நீட்டி அவரை அழைத்தாள்.அந்த நொடியில் ஞானோதயம் பெற்றார் அருணகிரிநாதர். பெண் என்றால் தாய், தமக்கை எல்லோருமே பெண்தானே! அதாவது, உலகத்துப் பெண்களையெல்லாம் தாயாக, தமக்கையாக பாவிக்க வேண்டும் என்பதுதானே வாழ்க்கை நெறி?

அருணகிரியார் அகம் தெளிந்தார். முருகனை நாடினார். உருகினார். செய்த பாவங்களெல்லாம் கரைந்தோடுமாறு அழுது கண்ணீர் பெருக்கினார். முருகன் மயில் மீது அமர்ந்தபடி காட்சியளித்து அவருக்கு உவகை ஊட்டியதுடன் உடல் நோயெல்லாம் நீங்கச் செய்தார். அந்நாளில் திருவண்ணாமலை பிரதேசத்தின் ஆஸ்தான பண்டிதனான சம்பந்தாண்டானுக்கு அருணகிரியார் மீது ஆறாத பொறாமை ஏற்பட்டது.

அவருடைய ஞானம், முருக தரிசனத்துக்குப் பிறகு அவருக்கு ஏற்பட்ட தெய்வீகப்புலமை இவற்றால் அழுக்காறு கொண்ட அவன், அவரை தொலைத்துவிடத் தீர்மானித்தான். திருப்புகழ் பாடி முருக தத்துவத்தைப் பரப்பிய பாவலர், வில்லிபுத்தூராரின் கல்விச் செருக்கை அடக்கியவர் என்று அவர் பெரிதும் புகழ்ப்படவே அதை தனக்கு பிறர் செய்யும் அவமரியாதையாகவே நினைத்தான் சம்பந்தாண்டான்.

அரசனைத் தன் கைக்குள் போட்டுக் கொண்டு அந்த செல்வாக்கில், ‘அரசருக்குப் பெரிதும் விருப்பமான பாரிஜாத மலரைக் கொண்டு வாருங்கள்’ என்று அவருக்கு ஆணையிட்டான். அவனுடைய ஆணைக்குப் பின்னால் ஏதோ சதியிருப்பதை உணர்ந்த அருணகிரியார், துணிவுடன் ஒரு முயற்சியை மேற்கொண்டார். அதன்படி, இறந்து கிடந்த ஒரு கிளியின் உடலுக்குள் கூடு பாய்ந்தார். பறந்து சென்றார்.

பாரிஜாத மலர்களைக் கொண்டு வந்தார். மன்னனிடம் சமர்ப்பித்தார். இடைப்பட்ட காலகட்டத்தில் சம்பந்தாண்டான் தந்திரமாக ஒரு வேலை செய்தான். அருணகிரியாரின் உடலைச் சுட்டிக் காட்டி, ‘பாரிஜாத மலர் கொண்டு வரும் முயற்சியில் தோற்றுவிட்டதால் தற்கொலை செய்து கொண்டார்’ என்று புனைக்கதை கூறினான். அது மட்டுமன்றி, ‘தம் பிரேதத்தை எரிப்பதில்தான் அருணகிரியாருக்கு விருப்பம்’என்றும் கூறி, அவர் உடலுக்கு எரியூட்டி விட்டான்.

கிளி ரூபமாக வந்த அருணகிரியார், தன் உடலின் சாம்பல் மட்டுமே எஞ்சியிருப்பதைக் கண்டு கிளி உருவத்துடனேயே முருகனை அடைந்தார் என்கிறது புராணம்.

Read Entire Article