Gandhi Kanakku

7 months ago 31
Arumugam Kr 'வ உ சியும் காந்தியும்’ நூலுக்கு நாடகம் போல் கரு. ஆறுமுகத்தமிழன் எழுதியுள்ள மதிப்புரை.
காந்தி கணக்கு
“தாங்கள் எனக்குக் கொடுக்கும் பணத்தை என் பர்த்தா அவர்கள் வந்த பின் நியாயமான வட்டியுடன் திரும்பச் செலுத்தவும் தயாராக இருக்கிறேன்” என்று பலரிடமும் மீனாட்சி அம்மாள் இறைஞ்சினார். ...சில சமயங்களில் கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்ட நிலையில் அவமானப்படும் நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில் ‘நான் எனது மானம் கெடாத கூலி வேலைகள் செய்யவும் தயார்’ என்று மீனாட்சி அம்மாள் வேண்டியவர்களுக்குக் கடிதம் எழுதினார்.
இந்த அம்மாளை இவ்வளவு தவிக்கவிட்டு எங்கே போனான் அவளது கணவன்? சிறைக்கு. ஆனால் சிறையாளியான கணவனின்மேல் அந்த அம்மாள் கொண்டிருந்த மதிப்புக்கு எந்தக் குறைவுமில்லை. மகன் சிறைக்குப் போனதை நினைத்து மருகிய தனது மாமனாருக்குக் கடிதம் எழுதினார்: “...அவர்கள் சிறைப்பட்டார்கள் என்று நினையாது, கடவுள் ஞானத்தையும் மற்றைய உலக ஞானங்களையும் அடைவதற்குரிய தவச்சாலைக்கும் கல்விச்சாலைக்கும் சென்றிருக்கிறார்கள் என்று நினைத்துப் பூரண திருப்தியுடனும் சந்தோஷத்துடனும் இருங்கள்.”
தவித்துத் தத்தளிக்கும் நிலையிலும் இந்த அம்மாள் இவ்வளவு கொண்டாடுகிற அந்தக் கணவன் யார்? கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார்.
வங்காளத்திலும் மராட்டியத்திலும் பஞ்சாபிலும் விடுதலை வேட்கை மூண்டு கிடந்த காலத்தில் எந்த விழிப்புணர்வும் இன்றி ‘benighted presidency / தூங்குமூஞ்சி மாகாணம்’ என்று பழி கொண்டிருந்த சென்னை மாகாணத்தை எழுப்பத் தூத்துக்குடியில் சுடர் கொளுத்தினார் வ.உ.சி. வெள்ளையன் இடுப்பொடிக்கவென்றே அவனுக்குப் போட்டியாய்க் கப்பல் ஓட்டினார். பொறுப்பானா வெள்ளைக்காரன்? வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்து அவர் இடுப்பொடிக்கச் செக்கிழுக்க வைத்தான்.
வ.உ.சி.யைச் சிறை மீட்க அவரது மனைவி மீனாட்சி அம்மாள் வழக்கு நடத்த வேண்டியிருந்தது; வழக்கு நடத்தப் பணம் வேண்டியிருந்தது. அதற்காகத்தான் அந்த அம்மாள் உதவி கேட்டு வேண்டியவர்களுக்குக் கடிதங்கள் எழுதுகிறார். இந்தியத் தமிழர்கள் அசையவில்லை. அச்சம். சும்மாவா? இரட்டை ஆயுள் தண்டனை.
இந்தியத் தமிழர்கள் செய்யாத உதவியைத் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் செய்தார்கள். ஆறு பவுன் அனுப்பினார்கள். அன்றைக்கு ஆறு பவுன் என்பது தொண்ணூறு ரூபாய். ஆனால் பிரிவி கவுன்சிலில் வழக்கு நடத்தப் பணத் தேவை பத்தாயிரம் ரூபாய். மீண்டும் ஒரு முயற்சியில் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் 363 ரூபாய் 11 அணா திரட்டி அனுப்புகிறார்கள்.
பிறகு காந்தி வழியாகவும் ஒரு தொகை அனுப்பியிருக்கிறார்கள். தொகை 347 ரூபாய் 12 அணா. அந்தத் தொகை அனுப்பப்பட்ட காலத்தில் வ.உ.சி. சிறை மீண்டு வெளியே வந்துவிட்டார். ஆனால் தொகை வ.உ.சி.க்கு வந்து சேரவில்லை.
அவ்வளவுதான். இதுவரையிலான செய்தியை வைத்துக்கொண்டு, ‘காந்தி கணக்குன்னா என்ன தெரியுமா? அடுத்தவன் காசை ஆட்டையப் போடுறதுதான்!’ என்று ஓர் அவதூறைச் சொல்லி அதை எந்த ஆதாரமும் இல்லாமல் வ.உ.சி. பெயரால் நிறுவவும் முற்பட்டனர் தமிழ்நாட்டின் கூர்கெட்ட கூமுட்டையர் சிலர்.
“வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா” என்ற (111 பக்கங்களே கொண்ட) தனது சிறுநூலின்வழி, காந்தியும் வ.உ.சி.யும் எழுதிக்கொண்ட கடிதங்களைக் கொண்டு இந்தப் பொய்யைச் சுட்டுக் கருக்குகிறார் ஆ. இரா. வேங்கடாசலபதி.
“தமிழ்ச் சூழலில் தவறான வரலாற்றுச் செய்தியொன்று பரவிவிட்டால் எவ்வளவு ஆதாரங்களைப் படைக்கலனாகக் கொண்டாலும் அதனை நேராக்க இயலாது. அழிக்க அழிக்க மயில் ராவணன் போல் ஐதீகம் பல்கிக்கொண்டே இருக்கும். சமூக ஊடகங்கள் அந்த மயில் ராவணனுக்குக் குருதிக் கொடை கொடுக்கும் காலம் இது. இருப்பினும் காலக் கணக்கை நேர்செய்ய வேண்டியது வரலாற்று ஆய்வாளர்களின் கடமை” என்று நூலின் முன்னுரையில் சலபதி எழுதுகிறார்.
ஏன் இந்தச் சலிப்பு? காந்தி வ.உ.சி.யை ஏமாற்றவில்லை என்பதை விளக்கி 26 சனவரி 2003ஆம் நாளிட்ட (ஆங்கில) இந்துவில் இப்பொருள் தொடர்பாக “When Gandhi Visited Madras” என்ற தலைப்பில் சலபதியின் முதல் கட்டுரை வருகிறது. பிறகு மேலும் சில புதிய செய்திகளோடு 3 அக்டோபர் 2019ஆம் நாளிட்ட இந்து தமிழ் திசையில் “வ.உ.சி.யை ஏமாற்றினாரா காந்தி?” என்ற தலைப்பில் மற்றொரு கட்டுரை வருகிறது. ஆனாலும் காந்திக் கணக்கை நேர் செய்ய மறுக்கிறார்கள் காதறுந்தவர்கள். ‘கேட்கச் செவியுள்ளவர்கள் கேட்கக் கடவர்’ என்று ஆதாரங்களையும் இணைத்து நூலாக்கி வெளியிட்டிருக்கிறார் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ஆய்வாளர்.
காந்தி வ.உ.சி.க்குச் சேர வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டார், வ.உ.சி. அதைப் பெற்றுக்கொண்டார் என்பதை அவர்கள் இருவரும் எழுதிக்கொண்ட கடிதங்களை ஆதாரமாக வைத்து வெளிச்சமிட்டுக் காட்டுகிறார் சலபதி.
வ.உ.சி.யும் காந்தியும் எழுதிக்கொண்ட கடிதங்களில் கைக்குக் கிடைத்தவை பத்தொன்பது. அவற்றில் வ.உ.சி.யின் கடிதங்கள் எட்டு, காந்தியின் கடிதங்கள் பதினொன்று (அவற்றில் ஒன்றை அந்தாள் தமிழில் எழுதியிருக்கிறார்).
...கார்டு வந்து சேர்ந்தது... [ஆ]பிரிக்காவிலிருந்து இன்னும் [வ]ந்து சேரவில்லை. அதற்கு... எனக்குத் தெரியவில்லை. ...ழி வருவதற்கு மூன்று ...றது. வந்தே மாதரம்
[மா]தம் ... பதினான்கு தினம்
மோகந்தாஸ் காந்தி
எனக்கு தெரியவில்லை என்று ஒற்றுப் பிழையோடு எழுதாமல், எனக்கு‘த்’ தெரியவில்லை என்று ஒற்றி எழுதியிருக்கிறார். மோகந்தாஸ் என்று வேறு.
வ.உ.சி. காந்திக்கு எழுதிய கடிதம் ஒன்றின் பகுதி இது:
“எனக்காகத் தரப்பட்ட பணத்தை – எனக்காகத் தரப்படத் தயாராய் இருக்கும் பணத்தை – வேண்டாம் என்று சொல்ல எக்காரணமும் இல்லை. இப்போது இருக்கும் நிலையில் அந்தப் பணம் வேண்டாம் என்று சொல்வேனேயானால் அது நான் எனக்கும் என் குடும்பத்திற்கும் இழைக்கும் தவறேயாகும். ஆதலால், தாங்கள் தங்களுக்கு வசதிப்பட்டபோது அன்போடு அப்பணத்தை... அனுப்பி உதவ வேண்டுகிறேன்.”
ஐயோ! ஐயோ! தேடிய மாமுதல் சேர வழங்கிக் கப்பலோட்டிய தமிழன்! தேசத்துக்காகத் தன்னை வைத்துச் சொத்திழந்த தலைவன்! குறளைப் போற்றி உரை வடித்த செம்மல்! இந்தக் கடிதத்தை எழுதும்போது ‘ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல்’ என்னும் குறள் நினைவுக்கு வந்திருக்கும்தானே? வெந்து புழுங்கிப் போயிருக்க மாட்டானா?
காந்தியைப் பார்க்க நேரம் கேட்கிறார் வ.உ.சி. சனிக்கிழமை காலை 6:00 மணிக்கு வரச் சொல்கிறார் காந்தி. ‘அது தோதுப்படாது; மயிலாப்பூரிலிருந்து கிளம்பும் முதல் டிராம் வண்டி 5:30 மணிக்குத்தான் கிளம்பும். இப்போதுள்ள என் வசதிக்கு இதைத் தவிர வேறு பயண மார்க்கமே இல்லை என்பதால் 6:30 மணிக்குத்தான் வரமுடியும்’ என்கிறார் வ.உ.சி. வறுமையிலும் செம்மை. எளிய ஆட்கள் இந்நிலைக்கு ஆட்பட்டிருந்தால் தன்னிரக்கத்திலேயே காலஞ் சென்றிருப்பார்கள்.
காந்தி, வ.உ.சி. ஆகிய இருபெரும் தலைவர்களின் ஆளுமைகள் சலபதியின் எழுத்தில் உணர்ச்சிகரமாக எழும்பி நிற்கின்றன. படிக்கத் துணியும் வன்னெஞ்சப் பேதையர்க்கும் கண்ணீர் கசியும்.
கவுன்சிலர்களுக்கெல்லாம் தண்ணளி செய்து புரக்கும் இந்தத் தேசம் காவியத் தலைவர்களையெல்லாம் காயலான் கடையில் போட்டுவிட்டது. காயலான் கடையில் குப்பை பொறுக்கி வரலாற்று மீட்புப் பணி செய்யும் ஆய்வாளர் வேங்கடாசலபதி வாழ்க.
காந்தி கணக்கு நேர்.
jayasala42
Read Entire Article