பிரபஞ்சத்தின் மையத்தில் அமிர்த சாகரத்தின் நடுவே ஶ்ரீபுரம் எனும் ஶ்ரீசக்கர வடிவ நகரில், ராஜதர்பாரில் ரத்ன சிம்ஹாசனத்தில் ஶ்ரீலலிதா திரிபுர ஸுந்தரி வீற்றிருக்கின்றாள். அவளைச் சூழ்ந்து அவளது மந்திரியான மாதங்கி, படைத் தளபதிகளான அஸ்வாரூடா, வராகி போன்ற சப்த மாதர், மற்ற மகா வித்யாக்கள் அமர்ந்திருக்கின்றனர்.
சந்தோஷம் பொங்கிப் பெருகிய வேளையில் சகல ஆன்மாக்களையும் ரக்ஷிக்க தேவி கருணை கொண்டாள். அதனால் ஜகன்மாதாவான லலிதாம்பிகை உலக உயிர்கள் இன்புற்று வாழும் பொருட்டுத் தன்னுடைய நாமாவளிகளில் சிறந்தவற்றை வெளிப்படுத்த விரும்பினாள். அவளின் விருப்பத்தைப் புரிந்துகொண்ட வாக் தேவியரான மோதினீ, சர்வேஸ்வரி, கௌலினீ, வஸீனி, விமலா, அருணா, ஜயினீ, காமேஸ்வரி போன்றோர் தொடர்ந்து பாட, அம்பிகையின் சகஸ்ரநாம துதிப்பாடல் வெளியானது. அம்பிகையின் அனந்த கோடி திருநாமங்களில் ஶ்ரீலலிதா என்ற பெயரே அம்பிகைக்கு உவப்பானது என்பதால் அந்த பெயரிலேயே அவள் திருநாமங்கள் 1000 கூறும் பாடலும் உருவானது.